சென்னை, அக். 4 –

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களின் வருகையைக் கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது மோதி அதன் காரணமாக நான்கு விவசாயிகள் உயிர் இழந்ததும் பலர் காயமடைந்ததும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் சட்டவிரோதமாக கைதுச் செய்யப்பட்டுள்ளதும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் உ.பி. வருவதைத் தடைச் செய்திருப்பதும் பாஜக ஆளும் உ.பி.யில் ஜனநாயக நெறிமுறைகள் முற்றிலும் சீர்கெட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

 மனிதநேயமற்ற வகையில் விவசாயிகள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருக்கும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோருகின்றேன். வன்முறையைத் தூண்டிய வழக்கும் அவர் மீது தொடுக்க வேண்டும். அஜய் சிங்கின் மகனும் அவரை சேர்ந்தவர்கள் மீதும் கொலை வழக்கு (302 இ.பி.கோ) பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.  சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கையைச் செவி சாய்க்காமல் அறவழியில் போராடும் விவசாயிகளைக் கொடூர முறையில் ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் வன்மையான கண்டனங்களை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here