பொன்னேரி, பிப். 22 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சின்னக்காவணம் பகுதி பழவேற்காடு செல்லும் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுவாயல் வழியாக பெரியகாவணம், சின்னக்காவணம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி பழவேற்காடு வரையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னகாவணம் கிராமத்தில் உள்ள  வீடுகள், வணிக நிறுவனங்கள், கோயில்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி  4 வழி சாலை, இணைப்பு மேம்பாலம் அமைப்பதற்காக அங்குள்ள குடியிருப்புவாசிகளை உடனடியாக வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த்துறையினர் மூலம் நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் தங்களை திடீரென அப்பகுதியில் இருந்து வெளியேற கூறுவது ஏற்க முடியாதெனவும், மேலும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும்,  4 வழி சாலை திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான குளத்தை தீயணைப்பு துறையினருக்கு பட்டா வழங்கியுள்ளதாகவும், அதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், பொன்னேரி-பழவேற்காடு இடையே செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பழவேற்காடு செல்லும் சாலை மற்றும் கும்மிடிப்பூண்டி செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இத் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு உடனிடயாக வந்த வட்டாட்சியர் செல்வகுமார் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த  இப்போராட்டம் பொன்னேரி சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வட்டாட்சியர் அறிவுறுத்தியதன் பேரில், இம்மறியல் போராட்டம் கைவிடப்பட்டு அதனைத் தொடர்ந்து  சின்னக்காவணம் கிராம நிர்வாகிகள் ஒன்றுக்கூடி சார் ஆட்சியரை சந்தித்து அவரிடம் மனுவினை அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here