விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சரும் ஆன ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள். அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார். மோடி அரசு விவசாயத்தை ஐந்து ஆண்டுகள் சீரழித்து விட்டு இன்று ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ 2000 தரப்போகிறார்கள்!. இது ஓட்டுக்கு லஞ்சம் என்பதைத் தவிர வேறு என்ன?. ஐந்து பேர் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ 17. இது உதவித்தொகையா, பிச்சையா, லஞ்சமா?’’ என்று பதிவிட்டுள்ளார்.