திருவண்ணாமலை, ஜூலை. 15 –
திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பீமன் – துரியோதனன் படுகளம் டைப்பெற்றது. மேலும் இவ்விழாவில் பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வள்ளிவாகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 65வது ஆண்டு வெள்ளி விழாவுடன், மகாபாரத நாடகமும் நடைபெற்றது. நேற்று துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையட்டி உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை வடிவமைக்கப்பட்டு, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் – துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.
இதில் பீமன் வேடமணிந்த ஒருவர் துரியோதனனை வதம் செய்தார். பின் கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. சபதம் முடிந்ததையடுத்து அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவிற்காக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பூங்கரகம் அலங்கரித்து, ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து, திரௌபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளிவாகை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலாகுமார், ஊர் நாட்டாண்மைகாரர்கள் ஜி.குமார், எஸ்.சங்கர், எம்.குப்பன், எம்.சேட்டு, வி.ஏழுமலை, எம்.குமார் மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள், உபயதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.






















