திருவண்ணாமலை. ஜூலை.15 –

திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் அவதாரத் திருநாள் விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர், தனது தீய செயல்களால் மனம் வருந்தி திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அப்போது அவரை முருகப்பெருமான் காப்பாற்றியதாக வரலாறு.

அதன் பின்பு சுமார் 167 ஆலயங்களுக்கு அருணகிரிநாதர் சென்று முருகன் மீது பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருப்புகழ் ஆக உள்ளது. இது தேவாரத்திற்கு இணையாகவும், ‘கந்தர் அலங்காரம்’ திருவாசகத்திற்கு இணையாகவும், ‘கந்தர் அனுபூதி’ திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன.

 

இந்நிலையில் அவரது அவதார திருநாள் கடந்த 13 ஆம் தேதியன்று  கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியே 60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சிக்கு ஆகாஷ் ஓட்டல் உரிமையாளர் ஆர்.முத்துக்கிருஷ்ணன், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையாளர் கே.பி.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். யாகத்தை மந்த்ரா ஜல சிவகுருக்கள் நடத்தினார். தீவினை, திருமண தடை, துஷ்டசக்தி பாதிப்பு ஆகியவை நீங்கிடவும், தொழில் மேன்மை அடையவும், குழந்தை பேறு, குடும்ப ஒற்றுமை பெறவும், நீண்ட ஆயுளுடன் பூரண உடல் நல பெறவும் யாகத்தில் பங்கேற்றவர்கள் தங்களது ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டனர்.

 

யாகத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் புதுவை நீதிபதி முருகபூபதி, ஸ்ரீஅருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை தலைவர் எம்.சின்னராஜ், செயலாளர் பி.அமரேசன், பொருளாளர் வி.தனுசு, உறுப்பினர்கள் டி.பி.என்.தேவராஜ், வழக்கறிஞர் பழனிராஜ், ராமச்சந்திர உபாத்தியாயா, மணிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்
விழாவிற்கான ஏறபாடுகளை பேராசிரியர் ராமு, கோயமுத்தூர் தொழிலதிபர் முருகன் ஆகியோர் செயதிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here