திருவண்ணாமலை,அக்.16-

திருவண்ணாமலை நகராட்சியில் தற்காலிக சாலையோர கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட 11 பணிகளுக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது, நகரில் உள்ள தற்காலிக கடைகளுக்கான கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்ல கட்டணம் வசூலிப்பது, ஆடு அறுப்பதற்கு கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்து உள்ளிட்ட 11 விதமான பணிகளுக்கான ஏலம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலத்தில் நடந்தது.

நகராட்சி ஆணையாளர் சந்திரா தலைமையில் நடந்த இந்த ஏலத்தில் 11 பணிகளுக்கான ஏலத்தை திமுகவினரும், அதிமுகவினரும் இணைந்து ஏலம் எடுத்தனர். இதனால் நகராட்சிக்கு ரூ.99 லட்சத்து 61 ஆயிரம் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.85 லட்சம் மட்டுமே சென்ற ஏலம் இந்த ஆண்டு ரூ.99.61 லட்சத்திற்கு விடப்பட்டதால் நகராட்சிக்கு கூடுதலாக ரூ.14 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை நகருக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ஏலம் மட்டும் நடைபெறவில்லை. இதற்கான ஏலத்தொகை அதிகமாக உள்ளதாலும் கடந்த முறை இந்த பணிக்கு ஏலம் எடுத்தவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாலும் திமுகவினரும், அதிமுகவினரும் இணைந்து ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் இந்த ஒரு பணிக்கு மட்டும் ஏலம் விடப்படாமல் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலத்தில் நடந்த ஏலத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் சகோதர போக்கை கடைபிடித்ததால் ஏலம் சுமுகமான முறையில் நடந்து முடிந்தது.

திருவண்ணாமலை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி தங்கும் விடுதிக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் மட்டும் திமுகவைத் சேர்ந்த இருவரிடையே கடும் போட்டி நிலவியதால் சிறிதளவு சலசலப்பு ஏற்பட்டது.
இறுதியில் ஏலத்தில் கலந்து கொண்ட ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா நன்றி கூறினார்.

நகர ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளும் கட்சியாக உள்ள திமுகவினரும், எதிர்கட்சியாக உள்ள அதிமுகவினரும் கொள்கை ரீதியில் மாறுபட்டாலும் நகராட்சி பணிகளுக்கான ஏலம் எடுப்பதில் ஒன்று பட்டே செயல்பட்டது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்னும் முதுமொழியை நினைவுபடுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here