திருவண்ணாமலை, ஜன. 17 –
திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு நேர்காணல் நடத்தினார். திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளது. அதில் பொது 17, பொது பெண் 17, ஆதிதிராவிடர் பொது 2, ஆதிதிராவிடர் பெண் 3 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு அவர்களிடம் நேர்காணல் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்பி, மருத்துவரணி மாநில துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்எல்ஏ, நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், டிவிஎம்.நேரு, பிரியா விஜயரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



















