திருவண்ணாமலை செப்.30-
திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ வளாகத்தில் மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் அக்டோபர் 11-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்.பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் செய்யார் சர்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
என்.சிவிடி மற்றும் எஸ்.சிவிடி முறையில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்று 2020-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற, 2020-ம் ஆண்டிற்கு முன்னதாக தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம்.
ஐ.டி.ஐ.யில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8,9,10,11,12ம் வகுப்பு கல்வித்தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற் பழகுநர் பயிற்சி பெற்று தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறலாம்.
தொழிற்பழகுநர் பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
தொழிற்பழகுநர் பயிற்சிக்குப் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் தொழிற்பழகுநர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.
இம் முகாமிற்கு வருகை புரியும் பயிற்சியாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்து அதன் விவரத்தினை அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இம்முகாமில் ஒரு தவணையாவது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.