திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை – சென்னை இடையே தினசரி நேரடி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் சி.என்.அண்ணாதுரை எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் – காட்பாடி ரயில்வே மார்க்கத்தில், வேலூர் – விழுப்புரம் இடையே திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆரம்ப காலங்களில் மீனாட்சி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் காட்பாடி – மதுரை வரை இயக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த ரயில்வே பாதை 15 ஆண்டுகளுக்க முன்பு அகலப்பாதையாக மாற்றப்பட்டது. இந்த பணிகள் நடந்தபோது மீனாட்சி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு குறைந்த கட்டணத்தில் ரயில் இயக்கப்பட்டது. பின்னர் அந்த ரயிலும் நிறுத்தப்பட்டது. இதனால் திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் நேரடியாக வரப்போதிய அளவு ரயில்கள் இயக்கப்படவில்லை ஆன்மீக பூமியான திருவண்ணாமலைக்கு ரயில் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ரயில் நிர்வாகத்தால் திருவண்ணாமலை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடளுமனறத்தில் சிறப்பு கேள்வி நேரத்தின்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அணணாதுரை பேசும்போது திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் 125 ஆண்டுகள் பழமையானது உலகளவில் புகழ்பெற்ற ரமணா ஆசிரமம் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் மூக்குபொடிசித்தர் சேஷாத்திரி ஆசிரமம், யோகிராம்சூரத்குமார் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதேபோல் பல்வேறு பணிகளுக்காக திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்ன சென்று வருகின்றனர். திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டுமென்பது அனைத்து தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். திருவண்ணாமலை – தாம்பரம் இடையே விழுப்புரம் மார்க்கமாக இயங்கிவந்த சென்னை ரயிலும் கடந்த 2007ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. அகல ரயில்பாதை அமைப்பதற்கு இந்த ரயில் சேவை தொடர வில்லை எனவே திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு தினசரி நேரடி ரயில்சேவை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையின்மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.