இராசிபுரம், ஜூலை. 08 –
மல்லசமுத்திரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் திருத்தேர் அழகுப்படுத்தும் பணி மற்றும் திருவிழா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டிஅம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவிலில், வருடா வருடம் ஆனி மூல நட்சத்திரத்தன்று, தேர்த்திருவிழா நடப்பது வழக்கம்.
தனிப்பட்ட சமுதாயத்தினருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில், கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இந்நிலையில் எதிர் வரும் 12 ஆம் தேதி தேர்திருவிழா நடக்க இருப்பதை முன்னிட்டு, திருத்தேர் அழகுப்படுத்தும் பணி இன்று நடந்தது. அப்போது, இந்து அறநிலைத்துறை ஈரோடு துணை ஆணையர் ரமேஷ், நாமக்கல் உதவி ஆணையர் ரமேஷ், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, உதவி கோட்ட பொறியாளர் காளீஸ்வரி, மற்றும் பல அதிகாரிகள் தேரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இத்திருவிழாவின் அனைத்து பணிகளையும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளே முன்னின்று நடத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், திருவிழா முடியும் வரை எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க, கோவில்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே, 50க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.