கும்பகோணம், ஜன. 30 –
கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில், உள்ள அருள்மிகு பிரமம்புரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது, மேலும், இத்திருக்கல்யாண வைபவத்தினை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பான சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மன மகிழ்வோடு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலக்காவேரியில் அமைந்துள்ள அருள்மிகு பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலானது, சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான சிவ ஸ்தலமாகும்,
மேலும், மகா பிரளயத்திற்கு பின் உலகை சிருஷ்டிக்க, பிர்மா ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததுடன், அதன் அருகில் ஒரு தீர்த்தத்தையும் ஏற்படுத்தி வழிபட்டார் எனவும் பின்னர் அதுவே பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிர்ம்ம தீர்த்தமுமானதெனவும், இத்திருக்கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும், இங்கு இத்திருக்கோயிலுக்கு வந்து வணங்குவோரின் தலைவிதியையே மாற்றி அமைக்கும் சக்தி உள்ளவர்களாக, இத்திருக்கோயிலில் உள்ள தனி சன்னதியில் கிழக்கு நோக்கியிருக்கும் பிரமாவும், வடக்கு நோக்கியிருக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சத்ரு நிவர்த்தி மங்கள பிரத்தியங்கிராதேவி தெற்கு நோக்கி தனி சன்னதியில் இங்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு மாதம் தோறும் அமாவாசை தினத்தில் மாலை நிகும்பலா யாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தகைய சிறப்புமிகு இத்திருத்தலத்திற்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த 2016ம் ஆண்டு தை மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிலையில், இத்திருக்கோயிலின் 7ம் ஆண்டு, ஸம்வஸ்ராபிஷேக திருக்கல்யாண உற்சவத்தினை முன்னிட்டு, நேற்றிரவு அனைத்து சுவாமிகளுக்கு விசேஷ சந்தனகாப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, நந்தி வாத்தியங்கள் முழங்க, பழங்கள், மங்கல பொருட்கள், என சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்து சமர்பித்தல் நிகழ்வும் அதனை தொடர்ந்து, சுவாமியும் தாயாரும் நாதஸ்வர மேள தாளம் மங்கல வாத்தியங்கள் முழங்க, மாலை மாற்றும் வைபவமும், தொடர்ந்து ஊஞ்சல் மற்றும் நலுங்கு உற்சவமும் பின்னர் சிவாச்சாரியார்கள் விசேஷ யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் ஜபிக்க, திருக்கல்யாண உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக மாங்கல்ய தாராணமும் வெகு சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து, மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னப்பிரசாதங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.