புதுக்கோட்டை, ஆக. 02 –
மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி ஊராட்சியில் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்க்க விருப்பம் தெரிவித்திருந்த 15 விவசாயிகளின் கள விபரங்களை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அத்திவெட்டி ஊராட்சி பகுதியில் சொந்த செலவிலும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலமும், மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலமும் பண்ணை குட்டை வெட்டி உள்ள விவசாயிகளில் மீன் வளர்ப்பு செய்திட விருப்பம் தெரிவித்த 15 விவசாயிகளின் கள விபரங்கள் குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
அத்திவெட்டி கிழக்கு, அத்திவெட்டி மேற்கு, அத்தி வெட்டி மறவக்காடு ஆகிய கிராமங்களில் பண்ணை குட்டை அமைத்துள்ள விவசாயிகளுக்கு தஞ்சை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு திட்டத்தில் 50 சத மானியத்தில் மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனம் வழங்கப்பட உள்ளது.
இதன் பொருட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சை வேளாண் இணை இயக்குனர் ஆகியோரின் அறிவுரைப்படி பண்ணை குட்டை யார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் தற்போது பண்ணை குட்டையில் உள்ள நீரின் அளவு, மற்றும் விவசாயிகளின் விருப்ப நிலை போன்றவைகள் குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோரால் தனித்தனியாக கள ஆய்வு செய்யப்பட்டது.
இதில் விருப்பம் தெரிவித்து இருந்த விவசாயிகளில் ஒரே குடும்பத்தில் பண்ணை குட்டை அமைத்த விவசாயிகள் மற்றும் பண்ணை குட்டைகளில் நீர் இல்லாதவர்கள் நீங்களாக பிற விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, தஞ்சை மாவட்ட மீன்வள உதவி இயக்குனருக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட உள்ளதாக அவ்வாய்வின் போது மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார்.
மேலும் மாவட்ட மீன்வள உதவி இயக்குனரின் கள ஆய்வுக்கு பின் கலைஞர் திட்ட விவசாயிகளுக்கு 250 முதல் ஆயிரம் சதுர மீட்டர் பல்நோக்கு பண்ணை குட்டைகளுக்கு மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க மீன் குஞ்சுகள், மீன் தீவனம் மற்றும் பறவை தடுப்பு வசதிகளுக்கான மொத்த செலவீனம் (ரூ.36000) ரூபாய் முப்பத்தி ஆறாயிரத்தில் (ரூ18000) ரூபாய் பதினெட்டாயிரத்தினை (50%) மானியமாக அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம் தென்னந்தோப்புகள் மற்றும் நெல் வயல்களில் நீர் சேமிப்புக்காக மட்டும் உருவாக்கப்பட்ட பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் உயரும் என்பது உறுதியெனவும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.
மேலும் இவ்வாய்வின் போது உடனிருந்த துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி விவசாயிகளின் அடிப்படை விபரங்களை பதிவு செய்து கொண்டார். அத்திவெட்டி ஊராட்சியைச் சேர்ந்த குமாரவேல், மாரியம்மாள், வடிவேல், மூர்த்தி, புஷ்பவல்லி, ராதாகிருஷ்ணன், ராதா, பாலசுப்ரமணியன், பழனி, ராஜா, கஸ்தூரி, சிவசங்கர், வைரவ மூர்த்தி மற்றும் போஸ் ஆகிய விவசாயிகளின் பண்ணை குட்டைகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் படிவங்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதால் விருப்பமுள்ள விவசாயிகள் யாராவது இருப்பின் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரிடம் விவரம் தெரிவிக்கும் படி, வேளாண் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.