புதுக்கோட்டை, ஆக. 02 –

புதுக்கோட்டை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தில் பஞ்சாயத்து தென்னை விவசாயிகளுக்கு 100% பின்னேற்பு மானியத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில்  மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகளை வழங்கினார்.

மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தென்னை சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகள் 10 பேர் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா (ரூ.4000) ரூபாய் நான்காயிரம் மதிப்பிலான தேனீ பெட்டிகளை காரப்பங்காடு, மதுரபாசனிபுரம், விக்ரமம், மூத்தாகுறிச்சி, மன்னாங்காடு மற்றும் ஆலத்தூர் பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த தலா ஒரு விவசாயி வீதம் அவர்களுக்கு தேனீக்கள் வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது.

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பின் மூலம் அதிக காய் பிடிப்பை ஏற்படுத்தவும், தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், வேளாண் துறையால் தேனீ பெட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு தேனீ பெட்டி ரூபாய் 4000 விலையில் விவசாயி வாங்கிய பின் அந்த விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக அரசின் நூறு சதவீத மானியம் அவருடைய வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படுகிறது.

இத் தேனீ பெட்டி, செயல் விளக்கத்தின் கீழ் பெறப்பட்ட தேனீ பெட்டிகளாகும். மேலும், இது ஆறு அடுக்குகளுடன் வடிமைக்கப்பட்டது.  இப்பெட்டிகள் குறைந்த எடை கொண்ட மரங்களான புன்னை, வேங்கை மற்றும் பலா மரங்களில் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் இராணி தேனீயுடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தேனீ பெட்டிகள் பெற்றுக் கொண்ட விவசாயிகள் இதனை நிழல் உள்ள இடங்களிலும், அதிக மழை மேலே படாதவாறும் மற்றும் எறும்புகள் பெட்டியின் மேல் ஏறாதபடி தேனீ பெட்டி வைக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட்களின் கால்கள் நீர் உள்ள கலன்களில் இருக்குமாறு பராமரித்திட வேண்டுமென வேளாண் அலுவலர்கள் பயனாளிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

தேனீக்களும் நீர் அருந்தும் தன்மை உடையது என்பதை நினைவுப்படுத்திய வேளாண் அலுவலர், அதற்காக தேனீ பெட்டிகளுக்கு அருகில் மூன்று குச்சிகளை வீ வடிவில் நட்டு அதில் ஒரு பெரிய கொட்டாங்குச்சியை வைத்து அதில் நீரை ஊற்றி வைக்கும்படியும், அதில் தேனீக்கள் அமர்ந்து நீர் குடிக்கும் வகையில் மிதக்கும் சிறு சிறு குச்சிகளை அந்த தண்ணீரில் போட்டு வைத்திடவும் தெரிவித்தனர்.

தேனீக்கள் தேன் சேகரிப்பதற்கு சூரியன் மறையும் வரை மலர்களை நோக்கி சென்று வந்து கொண்டே இருக்கும் இதனால் மகரந்த சேர்க்கை அதிகமாகி தரமான உற்பத்தியும், அதிக தேன் உற்பத்தியும் கிடைக்கிறது. தென்னை உற்பத்தி குறைவாக உள்ள இடங்களில் தேனீ பெட்டிகளை வைத்து அதன் வித்தியாசத்தை உணரலாம். ஆறு சட்டம் உள்ள பெட்டிகள் பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவு தேனீக்கள் அதிகளவில் தேனை சேகரிக்கும். மூன்று முதல் ஆறு  மாத காலத்தில் வளர்ந்து அடுக்குகள் முழுமை அடைந்து விடும். இதன் மூலம் தோப்புகளில் இன்னும் அதிக தேனீ பெட்டிகளை வைத்து தேனீக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.

இத்தேனீ வளர்ப்பின் மூலம், 30 சதவீதம் வரை தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் எனவும், தேனும் நமக்கு ஒரு கூடுதல் வருவாயாக இருக்கும் எனவும், விவசாயிகள் தேனீக்கள் வளர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த விபரங்களை தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு முறையான பராமரிப்பால் தேனீ வளர்ப்பில் முன்னேறலாம் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.

தேனீ பெட்டிகள் இரவு நேரங்களில் மட்டுமே வழங்கத் தகுந்தவை எனவே விவசாயிகளுக்கு இரவு 7.30 மணிக்கு மேல் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் சுரேஷ் தினேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மணி மற்றும் ராஜு ஆகியோர் தேனீ பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இந்நிகழ்வில் தேனீ பெட்டி பெற்றுக் கொண்ட விவசாயிகள் அரசு 50% மானியத்தில் இன்னும் அதிக அளவில் தேனீப் பெட்டிகளை விவசாயிக்கு வழங்கிட கேட்டுக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here