ஆவின் பால் உப பொருட்கள் வெளிமாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதின் மூலம் ஆண்டுக்கு ரூ.60 கோடி அளவிலான விற்பனையும் அதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ 6 கோடி லாபம் ஈட்டும் நோக்கில் புதிய திட்டம் வகுத்து அதற்கான செயல்பாட்டில் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது.
அதன் முதற் கட்டமாக ஆவின் பால் உப பொருட்களை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு மொத்த விற்பனை செய்ய விற்பனையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வணிக ஒப்பந்த ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
சென்னை ஆக.22-
நேற்று தலைமைச் செயலகத்தில் ஆவின் பாலின் உப பொருட்களை வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு மொத்த விற்பனை செய்ய முதற் கட்டமாக 6 விற்பனையாளர்களை தேர்வு செய்து அதற்கான வணிக ஒப்பந்த ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஆவின் நிறுவனம் கிராம அளவில் தொடக்க உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாள்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.
இந் நிறுவனம் 4.36 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 26.68 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமானது பால் மற்றும் பால் பொருட்களை முகவர்கள் மூலமாக சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கத்தார் போன்ற மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந் நிலையில் கடந்த ஆக 19 ஆம் தேதி அன்று முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலத்தில் நடைப்பெற்ற கால்நடை, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தின் நடவடிக்கைக்கு இணங்க பால் மற்றும் பால் உப பொருட்களை நுகவோர்க்கு ஏற்ற வகையில் தயாரித்து அதனை ஆந்திரா மற்றும் தெலுங்கான போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் ஐக்கிய அரபு நாடுகள் துபாய் அபுதாபி ஷார்ஜா அஜ்மன் ஓமன் கத்தார் கனடா அமெரிக்க போன்ற நாடுகளில் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் ரூ.60 கோடி அளவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டு சுமார் ரூ. 6 கோடி வரை லாபம் ஈட்டப்படுமென எதிர் பார்க்கப்படுகிறது. அதன்படி ஆவின் உப பொருட்களின் விற்பனையை உலமெங்கும் விரிவுப் படுத்தும் நோக்கில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய அதன் முதற்கட்டமாக 6 மொத்த விற்பனையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வணிக ஒப்பந்த ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். கால்நடை பரமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவஹர் ஐ.ஏ.எஸ். ஆவின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி ஐ.ஏ.எஸ். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.