தஞ்சாவூர், மே. 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூரில் அமைந்துள்ள நிப்டெம் என்று அழைக்கப்படும் தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்களுக்கான 2 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

அந்நிகழ்ச்சியில் கரக்பூரின் ஐ.ஐ.டி. இயக்குநர் முனைவர் வீரேந்திரகுமார் திவாரி தலைமை விருந்தினராகவும் மற்றும் ஐ.டி.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த்மாலிக், நிப்டெம் குழுமத்தின் தலைவர் முனைவர் சோதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அந்தந்தப் பிரிவுகளின் கீழ் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினர்.

அவ்விழாவில் பேராசிரியர் வீரேந்திரகுமார் திவாரி பேசும் போது  இந்திய நாடானது உணவு துறையில் உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பால் பொருட்கள் , குளிரூட்டப்பட்ட உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி பொருட்கள் உணவு பதப்படுத்தும் தொழில்துறை, நாட்டின் மொத்த உணவு சந்தையில் 32 சதவிகிதம் பங்களிப்பதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவிகிதமும், ஏற்றுமதியில் 13 சதவிகிதமும் மற்றும் மொத்த தொழில் முதலீடுகளில் 6 சதவீதமும் பங்களிக்கிறது.

எனவே மாணவர்கள் உணவு தொழில் துறையில் இன்றைய வளர்ச்சிக்கேற்ப ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் தொழில் துறை வளர்ச்சி , 4.0 D, 3D பிரிண்டிங், மற்றும் மேம்பட்ட தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

முனைவர் சோதி தனது சிறப்பு உரையில், இந்தியாவில் தற்போது உட்கொள்ளும் உணவின் மொத்த மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ .60 லட்சம் கோடி எனவும் இந்த மதிப்பு 2033-ம் ஆண்டு ரூ .100 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உணவு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஆராய்ச்சியிலும் மேலாண்மை வளர்ச்சியிலும் இருக்கிறது. நவீன தொழில்நுட்பங்கள், பேக்கேஜிங் தீர்வுகளை பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோருக்கு சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வழங்க முடியும்  என்றார்.

தொடர்ந்து ஹேமந்த் மாலிக் உணவு தொழில் நுட்பம் குறித்து விளக்கி பேசினார். அதையடுத்து தஞ்சாவூர் நிப்டெம் இயக்குனர் முனைவர் பழனிமுத்து பேசும் போது, இந்த கல்வி ஆண்டில் இந்த நிறுவனமானது உணவு பதன்செய் துறையில் 20-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளது. முக்கியமாக இந்நிறுவனம் 4 இந்திய காப்புரிமைகளை அதன் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெற்றுள்ளது. இந்த ஆண்டு திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 2870 பங்கேற்பாளர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவில் 70 இளநிலை உணவு தொழில்நுட்ப பட்டதாரிகள், 27 முதுகலை உணவு தொழில் நுட்பப் பட்டதாரிகள் , 9 முனைவர் உணவு தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின்நிறைவில் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் சண்முகசுந்தரம் நன்றியுரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here