கும்பகோணம், பிப். 25 –
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசிமகப்பெருவிழா இன்று காலை அருள்மிகு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பத்து நாட்களுக்கு ஒருசேர நடைபெறும் பிரசித்தி பெற்ற கும்பகோணம் மாசிமக பெருவிழா ஆறு சைவத்திருத்தலங்களில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதன் முதற்கட்டமாக மகாமகக்குள வடகரையில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகாசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயிலில், பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கொடிமரத்திற்கு எண்ணெய் காப்பு சாற்றி மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து, கொடிமரத்தில் நந்திபெருமான் திருவுருவம் வரையப்பட்ட திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு சுவாமிகளுக்கும் கொடி மரத்திற்கும் கோபுர ஆர்த்தியும், பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் காலை மாலை சுவாமி பல்வேறு வாகனங்களில் விதியுலா முக்கிய நிகழ்ச்சியான 5 ஆம் நாளான மார்ச் 1 ஆம் தேதி 5 ஓலைச்சப்பரம் 7 ஆம் நாளான மார்ச் 3 ஆம் தேதி திருக்கல்யாணம் 9 ஆம் நாளான மார்ச் 5 ஆம் தேதி திருத்தேரோட்டம் (கட்டுத்தேர்) 10 ஆம் நாளாக மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது.
குறிப்பாக இன்று நடைப்பெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் சூரியனார் கோவில் மகாலிங்க தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்..

























