எல்லாபுரம், பிப். 25 –
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், இவரது நிலத்தில் பயிர் வைக்க சேடை உழும் பணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
எனவே, இப்பணிக்காக புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் ( வயது 53 ) என்ற விவசாயக் கூலி தொழிலாளி, அவரது இரண்டு காளை மாடுகளுடன் பலகையை அமைத்து சேடை உழுது கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஏகாம்பரத்தின் விவசாய நிலத்தின் நடுவே இருந்த இரும்பு மின்சார கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்ததாம். இதனால் சேடை உழுது கொண்டிருந்த சேறு முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு மாடுகளும் சேற்றில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானது. தொடர்ந்து பணியில் ஈடுப்பட்டிருந்த வாசுதேவன் மீதும் மின்சாரம் பாய்ந்த தால் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்றுவாறு கூக்குரல் இட்டுள்ளார்.
அப்போது அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்சாரக் கம்பத்துக்கு வரும் மின் இணைப்பை துண்டித்து மயங்கிய நிலையில் சேற்றில் விழுந்திருந்த வாசுதேவனை அவர்கள் அங்கிருந்து மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அதனைத்தொடர்ந்து அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.மேலமு இத்துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.























