திருவள்ளூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பஞ்சட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (45). இவரது மனைவி நிர்மலா (43) இவர் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மணி கடந்த ஆண்டு புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் 24 மாதம் தவணை முறையில் கடன் பெற்றுள்ளார். மேலும் அத்தொகையை 12 மாதங்களாக தவறாது செலுத்தி வந்த நிலையில், வீட்டின் வறுமை காரணமாக 13 வது மாத தவணை கட்ட தவறியதாக கூறப்படுகிறது.
மேலும் மாதத் தவனை கட்டும் தேதி 10 தினங்கள் தள்ளிச் சென்றதால் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் வேப்பஞ்சத்தில் கிராமத்தில் உள்ள மணி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மணி வீட்டில் இல்லாததால் அவரது மனைவி நிர்மலாவிடம் கட்ட தவறிய ஒரு மாத தவணத் தொகையை கேட்டுள்ளார்.
அப்பொழுது தங்களது குடும்ப கஷ்டம் காரணமாக இந்த மாதம் தவணை செலுத்த முடியவில்லை எனவும் மேலும் இன்னும் ஒரு வார காலத்தில் செலுத்தி விடுவதாக நிர்மலா கூறியுள்ளார். இருப்பினும் தனியார் நிதி நிறுவன ஊழியர், மணியையும், அவரது மனைவி நிர்மலாவையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிய வருகிறது.
அதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா பூச்சி மருந்து குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நிர்மலா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நிர்மலாவின் கணவர் மணி கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப் புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.