நன்னிலம், மார்ச். 25 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியில் வசித்து வருபவர் சிவனேசன் மகன் சுபாஷ் வயது 25. மேலும் இவர் அப்பகுதியில் வாகனம் ஓட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சுபாஷ் கடந்த சில வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள் அஷ்டலட்சுமி என்கின்ற 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
மேலும் இவர்களின் அக்காதல் விவகாரம் அவர்கள் இருவீட்டுக்கும் தெரிய வர இவர்களது காதலுக்கு அவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு சுபாஷ் அஷ்டலட்சுமியை அழைத்துச் சென்று வெளியூரில் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இக்காதல் இளம் ஜோடிக்கு தற்போது அழகான மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது.
தொடர்ந்து சோத்தக்குடி வந்த அக்காதல் தம்பதியர்கள் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தகவல் தெரிய வருகிறது.
மேலும் இத்தகராறுக்கான காரணமாக தகவல் தெரிய வருவது, சுபாஷ் தினமும் குடித்துவிட்டு வந்து தனது காதல் மனைவி அஷ்டலட்சுமியிடம் சண்டையிடுவதுதான்.
இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அஷ்டலட்சுமி நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாசல் கதவை மூடிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் அதனைத் தொடர்ந்து குழந்தையின் அழுகின்ற குரல் அவ்வீட்டிலிருந்து கேட்டு அக்கம் பக்கத்தினர் அஷ்டலட்சுமியை கூப்பிட்டு பார்த்து அவ்வீட்டுக்கதவை தட்டியுள்ளனர்.
வெகுநேரமாக கதவை அவர்கள் தட்டியும் கதவுத் திறக்கப்படாத நிலையில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தபோது, அஷ்டலட்சுமி தூக்கு போட்ட நிலையில் இருந்து உள்ளார்.
இத்தகவல் வேலைக்கு சென்று இருந்த சுபாஷ் க்கு தெரிய வர, உடனடியாக அவர் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் அதனைத்தொடர்ந்து, சுபாஷ் அருகில் உள்ள பருத்திக் கொள்ளைக்கு சென்று அங்கு அவரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்த நன்னிலம் காவல்நிலைய காவல்துறையினர் உயிரிழந்த இளம் காதல் தம்பதியர்களின் உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிக்கெடுத்த இக்குடியால் மூன்று மாதக் குழந்தை தாய் தந்தையை இழந்து தவித்து அழும் காட்சியைக் கண்டு அவ்வூர் மக்கள் ஆழ்ந்த சோகத்தில் குடியைக்கெடுத்த இக்குடிப் பழக்கம் இன்னும் எத்தனை இளைஞர்களின் குடியை கெடுக்கவுள்ளதோ என்றவாறு இதயம் கணத்த வலியோடும் தொண்டை அடைத்து விழிக்கண்ணீர் தடையில்லாது பெருக்கெடுத்து ஓடிய அவர்கள் அழுதக் காட்சி காண்போரை ஒரு கனம் கதி கலங்க செய்தது.






















