தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி நீண்ட காலமாக தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அதிராம்பட்டினத்தை திமுக தலைமை இரண்டாகப் பிரித்து ஏற்கனவே நகர செயலாளராக இருந்த ராம குணசேகரன் ஒரு பகுதிக்கும் முன்னாள் பேரூராட்சி தலைவராக இருந்த அஸ்லம் ஒரு பகுதிக்கும் நகர செயலாளர்களாக இரண்டு நகர செயலாளர்களை நியமித்தது.
அதனால் அதிராம்பட்டினத்தில் உள்ள திமுகவினரிடையே மோதல் போக்கு உருவானது. இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திக்க தஞ்சை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரான முரசொலி வருகை தந்த அவர், நகரச் செயலாளர் ராம குணசேகரன் அலுவலகத்திற்கு சென்றார். பின்பு அங்கிருந்த நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வேட்பாளர் முரசொலி இடம் அதிராம்பட்டினத்தில் திமுக உடைந்ததற்கு காரணம் மாவட்ட செயலாளர் அண்ணாதுரைதான் எனவும், மேலும் அண்ணாதுரை எம்எல்ஏவாக இருந்து எங்கள் பகுதிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை மேலும் மாவட்ட செயலாளர் அண்ணாதுரையை பிரச்சார வாகனத்தில் ஏற்றக்கூடாது என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.
அதனால் செய்வதறியாது தவித்த முரசொலி அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். அச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி திமுக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















