திருவாரூர், நவ. 27 –
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமையில் இன்று உண்ணாவிரத அறப் போராட்டம் அறிவித்தது.
இந்நிலையில், அத்தகவலறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன். வட்டார பொறியாளர் சாந்தி கிராம நிர்வாக அலுவலர் நில அளவை அதிகாரி வருவாய் ஆய்வாளர் மற்றும் திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட சுமூக முடிவின் காரணமாக உண்ணாவிரதப் போராட்டத்தினை விசிக வினர் கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் அரசுத் தரப்பில் உடனடியாக மேற் கொள்ளப்பட்டது. உடனடியாக நில அளவை செய்யப்பட்டு, ஜேசிபி எந்திரங்கள் கொண்டு பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணி மேற்கொள்ளப்பட்டது. அதனால் அப்பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கும் மற்றும் உள்ளூர் உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் போராட்டத்தை முன்னெடுத்த விசிக வினருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.