திருவாரூர், ஆக. 15 –
இன்றைய தினம் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரும் உலக அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தி வெண் புறாக்களை வானில் பறக்க விட்டார்கள். இதைத்தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்கள் என 81 நபர்களுக்கு நற்சான்றிதழ்களும், பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும் 983 பயனாளிகளுக்கு 4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் அங்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் கண்டு ரசித்தார்கள்.