கும்பகோணம், செப். 11 –

கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளி மாவட்டத்தில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக எடுத்துவரப்பட்ட 10½ டன் நெல் மூட்டைகளோடு லாரியையும் பறிமுதல் செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லினை எடுத்து வந்து விற்பனை செய்ய கூடாது என உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வியாபாரிகள், வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்து தஞ்சை மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறை இயக்குனர் ஆபாஸ்குமார் உத்தரவின் பேரில் திருச்சி மண்டல குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில் தஞ்சை சரக குடிமைபொருள் குற்ற புலனாய்வு துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில்  மாவட்ட குறறபுலனாய்வு துறை உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் காவல்துறையினர் கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. அந்த லாரியை காவல்துறையினர் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10½ டன் நெல் மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து லாரியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த வெற்றிமணி (வயது 22), அரியலூர் நாகமங்கலத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, தஞ்சை மாவட்ட கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்ததும், டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நெல் மூட்டைகளோடு லாரியையும் பறிமுதல் செய்து திருநாகேஸ்வரம் அரசு நவீன அரிசி ஆலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அங்கு வெற்றிமணி, முருகேசன் ஆகியோரிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கும்பகோணம் டிவிசன் டெப்டி மேலாளர் இளங்கோவன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். முழுமையான விசாரணைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும். மேலும் இதனால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here