சென்னை, மார்ச். 02 –
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுகள் மேலும் தளர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாளை மார்ச் 3 முதல் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.
மேலும், அவ்வுத்தரவில் தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட மார்ச் 3 முதல் 31- 2022 வரை திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகப்பட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் இவ்விரண்டு கட்டப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதரக் கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் அவ்வுத்தரவின் வாயிலாக தமிழக மக்களுக்கு ஒரு வேண்டு கோளையும் விடுத்துள்ளார். தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளிகளை கடைப்படித்தல் மேலும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினையும் செலுத்திக்கொள்ளுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.























