ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரத்தில் அனைத்து தேவந்திரகுல வேளாளர்கள் சங்கங்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் தேவேந்திர குல வேளாளர்களின் 7 உட்பிரிவுகளை ஒரே பொது பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ராமநாதபுரத்தில் அனைத்து தேவேந்திரகுல வேளாளர்கள் சங்கங்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றமும், அதிகார மீட்சிக்கான முன்னெடுப்பும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கில் ராமகிருஷ்ணன் வரவேற்றார். கருத்தரங்கில் கடல் கடந்த நாடுகளில் மள்ளர்களின் வரலாற்று தொன்மங்கள் என்ற தலைப்பில் கடல்சார் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு பேசினார். பட்டியல் வெளியேற்றமும் சமூக முன்னேற்றமும் என்ற தலைப்பில் தமிழர் வரலாற்று ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பேச்சிமுத்து பேசினார். தமிழ் இலங்கியங்களில் தேவேந்திரர்களின் பண்பாடு என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் வடிவேல் ராவணன் பேசினார். தமிழ்தேச மக்கள் கட்சி செந்தமிழ் குமரன், தமிழக மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கம் தீரன் திருமுருகன், அழகர்சாமி பாண்டியன், நாகராஜ பாண்டியன் உட்பட பலர் பேசினர்.
கருத்தரங்கில், மருதநில மக்களான தேவேந்திரகுல வேளாளர்களை அட்டவணை பிரிவில் இருந்து வெளியேற்றி பொது பட்டியலில் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் 10 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தேவேந்திரகுல வேளாளர்களின் 7 உட் பிரிவுகளை ஒரே பொது பெயரில் தேவேந்திர வேளாளர் என அரசு ஆணை வழங்க வேண்டும், விடுதலை போராட்ட வீரர்கள் தியாகி இமானுவேல் சேகரனார், தளபதி வெண்ணிக் காலாடி, தளபதி ராமசாமி பன்னாடி பிறந்த நாள்களை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்க நிர்வாகி பிச்சைக் குமார் நன்றி கூறினார்.