திருவள்ளூர், செப். 13 –
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம் முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைப்பெற்றது. இதில் திருமுல்லைவாயில் சிவன் கோயில் அருகே நடைப்பெற்ற முகாமினை தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் கலந்துக்கொண்டு முகாமினை தொடங்கி வைத்து தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பழங்கள் மற்றும் உணவு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நிகழ்ச்சி திருமுல்லைவாயில் சோழம்மேடு சாலையில் அமைந்திருந்த முகமிற்கு முகாமிட்டு அங்கு ஆய்வு நடத்தினார். அதன் பின்பு ஆவடியில் நடைப்பெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பயனாளிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த வசதிகள் குறித்து உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சா.மு.நாசர் தமிழகத்தில் இருக்கிற மாவட்டங்களில் அதிகபட்சமாக 58000 தடுப்பூசிகளை செலுத்தி முதல் இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவிலேயே கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 1029 முகாம்களில் 4000 பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கை முடிவு செய்து இந்த முகாம் நடைப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், பொறியாளர் வைத்தியலிங்கம், நகரமைப்பு ஆய்வாளர் தினகரன், சுகாதாரத்துறை ஆய்வாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாளர் அப்துல் ஜாபர், துணைப் பொறியாளர் சங்கர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.