சுவாமிமலை, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது. சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் பிரபவ முதல் அட்சய வரைவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும்.
மேலும் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமையையும் பெற்றது இத்தலம். எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாததரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது. என இத்தல வரலாறு தெரிவிக்கிறது.
இத்தகு பல்வேறு சிறப்புகளை தன்னகத்தேக் கொண்ட திருமுருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்க அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் முருகன், நித்திய கல்யாண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.