திருவண்ணாமலை ஜூலை.22-

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா தொடங்கிவைத்தார்.
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் அருகில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமிற்கு தலைமையேற்று நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா கட்டிட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை நேற்று தொடங்கிவைத்தார்.
இந்த முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர் கே.உதயன் தலைமையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கட்டிட தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். அப்போது கட்டிட தொழிலாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு தொழிலாளர்கள் கொரோனா தொற்றுநோயிலிருந்து மீள அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு முகக்கவசம் அணியவேண்டும். மேலும் கட்டாயம் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதோடு தங்களது பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்த முகாமில் மருத்துவ செவிலியர் கிருபா, ஆய்வக நுட்பாளர் அமுதா, துப்புரவு மேற்பார்வையாளர்கள் சி.வெங்கடேசன், தியாகராஜன், மேகநாதன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here