திருவள்ளூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி விண்ணப்பித்த கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை உள்ள 9 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நகராட்சி அலுவலக வளாக அரங்கில் நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அச்சிறப்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, நகராட்சி, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலவாரியம் (சமூகபாதுகாப்பு திட்டம்) தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகள் உள்ளிட்ட 13 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
அதில் கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 3 பேர் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த அரை மணி நேரத்தில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் அப்போது திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அச்சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். அவர்களின் விண்ணப்ப மனுக்கள் அனைத்தையும் துறைச்சார்ந்த போர்டர்களில் உடனுக்குடன் அலுவலர்கள் பதிவேற்றம் செய்தனர்.


















