ராமநாதபுரம், மே 17-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுதேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியின்போது மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு பொது தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குபதிவு நடத்தப்பட்டு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லுாரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தனிதனியே பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள்/வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வருகின்ற 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையினை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் நடைப் பெறும் அதே போல் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின் போது முதலவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும். மின்னணு வாக்குபதிவு இயந்திரங்்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டு கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.
அதன்படி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மே 14 அன்று முதற்கட்ட பயிற்சி நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து 2ம் கட்ட பயிற்சி நடத்தப்பட்டுகின்றது. 20ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சி நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் வாக்குபதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு) இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்படும். அலுவலர்கள் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் கொண்டு வரப்படும் பெட்டியில் உள்ள முத்திரையின் தன்னமையினை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உறுதி செய்திட வேண்டும். அதேபோல் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின் வரிசை எண் விபரத்தினையும் படிவம் 17 சி உடன் ஒப்பிட்டு உறுதி செய்திட வேண்டும்.
இந்த இரண்டு விபரங்களையும் உறுதி செய்த பிறகு சம்பந்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் குறித்த விபரங்கள், வேட்பாளர்கள் வாரியாக பெற்ற வாக்குகள் உள்ளிட்ட விபரங்களை உரிய படிவத்தில் பிழையின்றி பூர்த்தி செய்து, ஒவ்வொரு சுற்றாக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலகளுக்கு சமர்ப்பித்திட வேண்டும். மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைபேசி உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வதற்கு கட்டாயம் அனுமதி இல்லை. தேர்தல் வாக்கு எண்ணும்
விதிமுறைகளை முறையே பின்பற்றி வெளிப்படைத்தன்மையாக பணியாற்றிட வேண்டும்
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் மதியழகன் (திருவாடானை), சுமன் (ராமநாதபுரம்), ராமன் (பரமக்குடி) கயல்விழி (முதுகுளத்துார்), சுப்பையா (அறந்தாங்கி), கார்த்திகைசெல்வி (திருச்சுழி) உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.