ராமநாதபுரம், ஜூலை 24- ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை கிராமத்தில் மக்கள் வைத்த 18 கோரிக்கைகள், துறை வாரியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உடனடியாக ரூ.35 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் தாலுகா ஆற்றாங்கரை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இம்முகாமில் பல்வேறு அரசு துறை மூலமாக 55 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 98 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் வழங்கினார்.
பின் அவர் விழாவில் தலைமை வகித்து பேசியதாவது:
பொது மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிலையிலான அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் விதமாக மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் அத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொது மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கி கூறப்படுகிறது. பல்வேறு அரசு துறையின் மூலம் விழிப்புணர்வு காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு்ள்ளது
ஆற்றாங்கரை மக்கள் வழங்கிய 18 கோரிக்கைகள் நிறைவேற்றிட அந்தந்த துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை நானே நேரில் கண்காணிப்பேன். மேலும் ரூ.35 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் பெருமளவில் தென்னை மற்றும் பனை மரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பாக நமது மாவட்டத்தில் 8 ஆயிரத்து 300 ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை விவசாயத்தை மேம்படுத்தி தேவையான இயந்திரங்கள் பெற்றுத்தர உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் விதமாக பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் மூலம் பயிர் காப்பீடு செய்யப்பட்டு 2016-17ம் நிதியாண்டிற்கு ரூ.528 கோடி அளவில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2017-18ம் நிதியாண்டிதற்கு ரூ.477 கோடி அளவில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 2018-19ம் ஆண்டிற்கான இழப்பீட்டு தொகையினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர கடந்த 3 ஆண்டுகளாக 827 எம்எம் வரவேண்டிய மழை நமக்கு மிகவும் குறவாக வரப்பெற்றுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் விளைந்துள்ளன. எனவே அரசு அவற்றை கவனத்தில் கொண்டு மாற்றுப்பயிர்கள், மழைநீர் சேகரிப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு ஆணையின்படி மழைநீர் சேமிப்பில் முன்னோடியாக செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்நிலைள் தூர் வாரப்பட்டு வரத்துகால்வாய்களும் தூர் வாரப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2019ம் ஆண்டில் 69 கண்மாய்கள் ரூ.37.59 கோடி மதிப்பில் மாவட்டம் முழுவதும் அணைகள் பலப்படுத்துதல், வரத்துகால்வாய்கள் தூர்வாருதல் மதகுகள் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் ஆயிரத்து 112 ஊராட்சி ஒன்றிய கண்மாய்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரணிகளும் உள்ளன. அவற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிடவும், துார் வாரிடவும், கரைகளை பலப்படுத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரத பிரதமர் அறிவித்த சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் இருப்பதால் தனியார் துறைகளின் சிஎஸ்ஆர் நிதிகள் மூலமாகவும் மழைநீர் சேகரிப்பு மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு முதற்கட்டமாக சுமார் ரூ.2 கோடி மதிப்பில் 200 ஊரணிகள் துார் வாரிடவும் இதன் மூலமாக பொது இடங்களில் மழைநீர் சேகரிக்கவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளது. ரூ.ஒரு லட்சம் முழு மானியத்தில் 2 ஆயிரத்து 575 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பனைத் தொழிலை மேம்படு்த்தி ரூ.40 லட்சம் மானியம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 237 கி.மீ. கடற்பரப்பும், 180 கடலோர கிராமங்களும் உள்ளன. இவற்றில் பிரதானமாக மீன்பிடித்தொழில் செய்யப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் சென்ற ஆண்டு 1.46 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இவை தமிழகத்தில் ஐந்தில் ஒரு பங்காகும்
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் பேசினார்.
இந் நிகழ்ச்சியில் ராமநாதபுரம வருவாய் கோட்டாட்சியர் சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முருகேசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) கோபு, கால் நடைத்துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சொர்ணலிங்க், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், வேளாண் பொறியாளர் பாலாஜி, ராமநாதபுரம் தாசில்தார் தமிழ்செல்வி, உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.