ராமநாதபுரம், ஜூலை 3-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. யாதவர் சமுதாயத்தில் 93 குடும்பங்களை சேர்ந்த ஆயிர கணக்கான சொந்தங்கள் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நான்கு நாள் திருவிழாவில் சங்கமித்து விடுகின்றனர். ஊருக்கே கிடா கறிவிருந்து வழங்கி அசத்துகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் கூரிசாத்த அய்யனார் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோயிலில் ஜாதி மதபேதமின்றி அனைத்து தரப்பினரும் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பலருக்கு கேட்ட வரம் கிடைத்துள்ளதால் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்துதல், மூடி காணிக்கை செய்தல் போன்ற நேர்த்திகடன் செய்வதும் வழக்கம். ஒவ்வொரு சமுதாயத்தினரும் ஒவ்வொரு காலங்களில் கூரிசாத்த அய்யனார் கோயிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

3 ஆண்டுக்கு ஒருமுறை 93 குடும்பங்கள் வழிபாடு நடத்தும் வினோத திருவிழா:

ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் கோயிலில்் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கள்ளடிதிடல், மேவயல், உதயனுார், வடவிரிக்கை, பஞ்சனுார், ஸ்ரீஅரியாங்கோட்டை (மேற்கு), ஏந்தல் ஆகிய ஏழு கிராமங்களை சேர்ந்த யாதவர் சமுதாயத்தினர் 93 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடும்பத்துடன்( வெளிநாட்டில் இருந்தாலும் வந்துவிடுவது வழக்கமாம்) வந்து தனிதனியாக கூடாரங்கள் அமைத்து நான்கு நாட்கள் தங்கியிருந்து சாமி கும்பிடுவதை கடந்த 10 தலைமுறைகளாக கடைபிடித்து வருகின்றனர்.

கோயில் சாஸ்தா சேவை ஜெகதீசன் கூறும்போது:
யாதர் சமுதாயத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 7 கிராம 93 குடும்பத்தினர் தங்கள் குழந்தைகள், பெரியவர்கள், உறவினர்கள் சம்மந்தம் செய்தவர்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாகனங்கள் பிடித்து வந்துவிடுவர்.
முதல்நாளான செவ்வாய் கிழமை சாமிதரிசனம் செய்து சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த ஏழு கிராமத்திலிருந்து பலரும் சென்னை, திருச்சி, சிங்கப்பூர், மலேசியா, மதுரை, என பல்வேறு ஊர்களுக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்தாலும் இந்த நான்கு நாட்கள் அனைத்து பணிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு சாமி தரிசனம் செய்வதற்கு வந்து விடுகின்றனர்.

கோயிலில் சமபந்தி கிடா விருந்து:
இந்த 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஒவ்வொரு குடும்பத்தினரும் சாமிக்கு படையல் செய்வதற்கு ஆடு வளர்த்து அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் ஒரு ஆடு, இரண்டு ஆடுகிள், 3 ஆடுகள் என கொண்டு வருகின்றனர். கொண்டு வரப்படும் அனைத்து ஆடுகளும் விழாவின் முக்கிய நிகழ்ச்சிநாளான புதன்கிழமை ஜூலை 3ம் தேதி நள்ளிரவு ஆடுகளை சாமி வரம் கொடுத்தபின் வெட்டுகின்றனர். வெட்டப்படும் ஆடுகள் அனைவருக்கும் சமமாக முக்கியஸ்தர்கள் பிரித்து கொடுப்பது வழக்கமாம். ஆட்டு கூறு வாங்கி மறுநாள்காலையில் அந்தந்த குடும்பங்கள் கிடா விருந்து சமைக்கின்றனர். இந்த கிடாவிருந்தில் யார் வேண்டுமானாலும் சென்று பங்கேற்று வயிறுநிறைய சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக கோயிலுக்கு வெளிநபர்கள் யார் சென்றாலும் 93 குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் கோயிலுக்கு வரும் பக்தர்களை எங்கள் குடிலுக்கு வாங்க சாப்பிடலாம் என போட்டி போட்டு அழைத்து சாப்பிட வைத்து உபசரிக்கின்றனர். மீண்டும் நான்காவது நாள் அனைத்து குடும்பத்தினரும் சேர்ந்து கூரிசாத்த அய்யனார் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி சாமிதரிசனம் செய்து தங்கள் குடும்பம் மட்டுமின்றி விவசாயம் செழிக்க வேண்டும். நாட்டில் மக்கள் அமைதியாக நோய் நெடியின்றி வாழ வேண்டும் என மனதார வேண்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு விடைபெறுகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறவுகளை ஒன்று கூடுவதை காண ராமநாதபுரம் மக்கள் ஆனந்தமடைகின்றனர். இதுபோல் ஒவ்வொரு உறவுகளும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் எதிர்கால தலைமுறைகளுக்கு நமது வழிபாடுகளும், ஒற்றுமையம் தலைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை. 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here