ராமநாதபுரம் டூ புதுச்சேரி 4 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டி சிறுவனை காப்பாற்றிய டிரைவரை ஒரு நாள் முதல்வராக்கி பாராட்டு அறம் விழுதுகள் அறக்கட்டளை ஏற்பாடு

 ராமநாதபுரம், செப். 6-  ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து புதுச்சேரிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நான்கரை மணி நேரத்தில் கொண்டு சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரை அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் கல்லுாரியில் ஒரு நாள் முதல்வராக்கி கவுரப்படுத்தி சான்றிதழ் வழங்கினர்.

ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன்.  முதுகு வலியால்  பாதிக்கப்பட்டார். அவரை பெற்றோர் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதுகு தண்டுவடத்தில் புற்று நோய் பாதிப்புள்ளது.

5 மணி நேரத்திற்குள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் காப்பாற்றலாம், என தெரிவித்தனர். அங்கு செல்வதற்கு 366 கி.மீ., துாரம். போக்குவரத்து நெரிசலில் செல்ல குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் ஆகும். விமானம் மூலம் சென்றால் விமான நிலையத்திற்கு செல்வதற்கு தாமதமாகிவிடும். அதிக நேரம் ஆகும், என்பதால், அவரது பெற்றோர் மிகவும் வேதனைப் பட்டனர்.

ராமநாதபுரத்தில் உள்ள தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக  நிர்வாகிகள் தங்கள் அமைப்பு சார்ந்த ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் மிகவும் திறமையாக வாகனத்தை ஓட்டுபவர்கள் அவர்கள் அழைத்து செல்வார்கள்  என புறப்பட்டனர். ஒருங்கிணைப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய டவுன்களில் போக்குவரத்து பாதிக்கும் இடங்களில் அவர்கள் வாட்ஸ்அப் குழுக்களை இணைத்தனர்.

த.மு.மு.க., வினர் போலீசாருடன் இணைந்து அனைத்து ஊர்களிலும் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். அதற்கு பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்கினர். ராமநாதபுரத்தில் இருந்து மாலை 5:00 மணிக்கு முகமது அமிருல்லாவை ஆம்புலன்ஸ்சில் ஏற்றிக்கொண்டு ஜாஸ் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். தொண்டியில் நவீன ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு செய்து அதில்  சிறுவனை ஏற்றினர். பின் இரு ஆம்புலன்ஸ்கள் பின்னால் சென்றன. ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பு ஒலி பெருக்கியில் ,உயிர் காக்கும் பொருட்டு அதிவேகமாக ஆம்புலன்ஸ் வருவதால் போக்குவரத்திற்கு பொது மக்கள் இடையூறு செய்ய வேண்டாம் என அறிவித்துக் கொண்டே சென்றனர்.

த.மு.மு.க., வினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள், டிராபிக் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.ஆம்புலன்ஸ் எவ்வித போக்குவரத்து இடையூறு இல்லாமல் கிழக்கு கடற்கரை சாலைகளை கடந்து நாகபட்டினம், காரைக்கால், சிதம்பரம் வழியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு 9:30 மணிக்கு சென்றடைந்தது. சிறுவனை டாக்டர்கள் பரிசோதனை செய்து, பின் அறுவை சிகிச்சைக்கு அனுமதித்து, சிகிச்சையளித்து வருகின்றனர். தற்போது சிறுவன் நல்ல நிலையில் இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிகவும் கவனமாக குறித்த நேரத்தில் சிறுவனை கொண்டு சென்ற தமுமுக ஆம்புலன் டிரைவர் ஜாஸ் பணியை பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர். ராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் திறமையாக ஆம்புலன்ஸ் ஓட்டி சென்று சிறுவனை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் ஜாஸ் என்பவரை அறக்கட்டளையின் ராமநாதபுரம் பாத்திமா கேட்டரிங் கல்லூரியில் ஒரு நாள் முதல்வர் பணி வழங்கி கவுரவித்தது. ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்ற ஆம்புலன்ஸ் டிரைவர் ஜாஸ் கேட்டரிங் மற்றும் பாத்திமா கேட்டரிங் கல்லுாரி மாணவ மாணவிகளிடம் பொது நல சேவையாற்றுவது குறித்து விளக்கி பேசினார். மேலும் சிறுவனை காப்பாற்ற ஆம்புலன்சை எப்படி ஒட்டி சென்றோம் என்ற விபரத்தையும் சமுதாய சிந்தனையுடன் மாணவர்கள் வளர வேண்டும் என்றும் பேசினார். அறம் விழுதுகள் அறக்கட்டளை சேர்மன் முகம்மது சலாவுதீன் ஒருநாள் முதல்வர் ஆம்புலன்ஸ் டிரைவரின் சேவையை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here