திருவாரூர், ஆக. 14 –
திருவாரூர் நகராட்சி அருகில் அமைந்துள்ளது. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் திருவாரூர் புலிவலம் காந்தி நகரை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ஞானசுந்தரம் வயது 42 புரோகிதரராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்றிரவு இத்திருக்கோயிலில் பெரும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது ஞானசுந்தரம் வழிபாட்டின் போது மைக்கில் மந்திரம் வாசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் கையில் பிடித்திருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்து, ஞானசுந்தரம் தரையில் தூக்கி வீசப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அம்மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை ஞானசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த புரோகிதற்கு அபிநயா வயது 30 என்ற மனைவியும் ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தையும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும் இளம் வயது புரோகிதர் கோவிலில் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் பொழுது மின்சாரம் தாக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.