புதுச்சேரி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்களின் வீடுகளில் கஞ்சா ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதுக் குறித்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வீடு வீடாக சென்று அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதனைத்தடுத்திடும் வகையிலும், கட்டுப்படுத்திடும் வகையிலும் ஆப்ரேஷன் விடியல் என்கிற பெயரில் போலீசார் அவ்வப்போது சோதனைகள் நடத்தி கஞ்சா விற்பனையில் ஈடுப்படுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அச்சோதனையின் ஒருப் பகுதியாக இன்று ரெட்டியார் பாளையம் காவல் நிலைய சரகத்திற்க்கு உட்பட்ட மூலக்குளம், பூமியான்பேட், ஜெ ஜெ நகர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளிலும், கஞ்சா விற்பனை செய்யப்படும் என சந்தேகப்படும் இடங்களிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியூர்களுக்கு செல்வதென்றால் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும் என்றும் அப்பகுதியில் குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.
போலீசார் அப்பகுதியில் மேற்கொண்ட அச்சோதனையின் காரணமாக சிறிது நேரம் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.