தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு….
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கமாகும். மேலும் ஜூன் 12 திறக்கும் தண்ணீர் ஜூன் 16 ஆம் தேதி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என மூன்று ஆறுகள் 36 மற்றும் கிளையாறு 27000 வாய்க்கால்கள் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் அளவிற்கு இரண்டாம் மாவட்டம் முழுவதும் போக சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் மேட்டூரில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டதால் அக்டோபர் மாதம் 10 தேதியே மூடப்பட்டது. அதனால் டெல்டா மாவட்டத்தில் செய்யப்பட்ட 3.5 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடியில் பெரும்பாலான பகுதிகள் காயத் தொடங்கியது.
இந்நிலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே குருவை சாகுபடி செய்த விவசாயிகள் சம்பா சாகுபடியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டும் மேட்டூரில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாததாலும் போதிய அளவுக்கு மழை இல்லாத காரணத்தினாலும் ஜூன் 12 தண்ணீர் திறப்பது என்பது தற்போது வரைக் கேள்விக்குறியாக உள்ளது.
அதனால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நான்கு லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் 10 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடியும் கேள்விக்குறியாகவே உள்ளது. வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் கோடை பருவத்தில் 37 ஆயிரத்து 500 ஏக்கர் நெல் சாகுபடி செய்வது வழக்கம் இந்த ஆண்டு 30 ஆயிரத்து 750 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. செய்த சாகுபடியும் போதிய அளவுக்கு நிலத்தடி நீர் இல்லாததாலும் மும்முனை மின்சாரம் முறையாக கிடைக்காததாலும் காய்ந்து கருகி வருகிறது.
இந்நிலையில் இதே நிலை நீடித்து வந்தால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை என்பதும் உறுதியென்ற நிலையேக் காணப்படுகிறது.




















