காதலில் விழும் இன்றைய இளைஞர்கள் காதலி சொல்வதை அப்படியே வேதவாக்காக கருதி விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காதலிக்காக மோட்டார் சைக்கிள்களை திருடி உல்லாசமாக ஊர் சுற்றிய வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கொரட்டூர் பகுதியில் பிடிபட்டார்.

இவரைப்போல சென்னையில் காதலியுடன் வசதியாக வாழ்வதற்காக பல்வேறு இளைஞர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த நிலையில் சென்னையில் சினிமா பாணியில் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் காதலிக்காக பர்தா அணிந்து சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. ‘பாய்ஸ்’ படத்தில் காதலிக்காக நடிகர் சித்தார்த் சென்னை அண்ணாசாலையில் நிர்வாணமாக ஓடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.

ஆனால் சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் நேற்று மாலையில் காதலியின் முத்தத்துக்காக இளைஞர் ஒருவர் பர்தா அணிந்தபடி மெரினா கடற்கரையை நோக்கி நடந்து சென்று போலீசில் சிக்கியுள்ளார்.

இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பட்டாபிராமை சேர்ந்த சக்திவேல் என்ற வாலிபர் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். அப்போது காதலியிடம் சக்திவேல் முத்தம் கேட்டுள்ளார். அதற்கு காதலி அவரிடம் ஒரு சவால் விட்டுள்ளார். ராயப்பேட்டையில் இருந்து மெரினா கடற்கரை வரையில் பர்தா அணிந்தபடி நடந்து வந்தால் முத்தம் தருவதாக கூறியுள்ளார்.

காதலியின் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு சக்திவேலும் சவால் விட்டுள்ளார். மெரினா வரையில் நான் பர்தாவோடு நடந்து வந்து காட்டுகிறேன் என்று கூறினார்.

பின்னர் சக்திவேல் நேற்று மாலையில் சவாலை நிறைவேற்றிக் காட்டும் வகையில் பர்தா அணிந்தபடி நடந்து சென்றார்.

அப்போது அவரது நடையை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். காலில் அணிந்திருந்த செருப்பு சக்திவேல் ஆண் என்பதை காட்டிக் கொடுத்தது. இதையடுத்து ‘திருடன்… திருடன்’ என்று சிலர் சத்தம் போட்டனர். இதனால் அக்கம் பக்கத்தினரும் திரண்டனர்.

பின்னர் சக்திவேலை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஐஸ்அவுஸ் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது தான் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சக்திவேலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியின் முத்தத்துக்கு ஆசைப்பட்டு அவரது எண்ணப்படி மெரினா நோக்கி பர்தாவுடன் நடந்து சென்ற காதலன் சக்திவேல் போலீசில் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here