ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 75 ஆயிரத்து 534 சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகையான ரூ.2 ஆயிரத்தை வழங்கும் விதமாக 165 விவசாயிகளுக்கு உதவித்தொகை ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு வக்புவாரிய தலைவரும் ராமநாதபுரம் எம்பியுமான அன்வர்ராஜா நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
மத்திய அரசு 5 ஏக்கருக்கு குறைவான விவசாயம் செய்யக்கூடிய நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் வருமானத்தை உயர்த்திடும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி பாரத பிரதமர் உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மாநில அளவில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற விழாவில் சிறு குறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகை வழங்குவதற்கு அடையாளமாக 165 விவசாயிகளுக்கு இந்த ஆணை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 534 விவசாயிகள் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்டயிலில் விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகளை சேர்க்கும் வகையில் வருகின்ற பிப்25,26, மற்றும் 27ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வேளா்ண்மை இணை இயக்குனர் பொறுப்பு சொர்ணமாணிக்கம், கால்நடை மண்டல இணை இயக்குனர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷேக்அப்துல்லா, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கிஷோர்குமார், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் கவிதா, ராமநாதபுரம் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.