கும்பகோணம், மார்ச். 21 –
கும்பகோணம் தாராசுரம் கீழவீதியை சேர்ந்த ஓட்டுநர் கதிர் (எ) கதிரேசன், சந்திரா தம்பதியினரின் மகள் ரபஹி ( பெயர் மாற்றம் ) இவர் தாராசுரத்தில் உள்ள வை கோவிந்தசாமி நினைவு அரசு மேனிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வருகிறார், குடும்ப வறுமைக் காரணமாக மாலை நேரத்தில் பகுதி நேர பணிக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இம்மாணவியின் வகுப்பிலும், அதன் பக்கத்து வகுப்பிலும் ஆசிரியர் இல்லாத நிலையில், அந்த வகுப்பிற்கு சென்று அந்த வகுப்பு நண்பர்களுடன் இணைந்து ரெக்கார்டு நோட்டு எழுதியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த வகுப்பிற்கு வந்த ஆசிரியர் இது குறித்து கேட்டதுடன், தலைமை ஆசிரியர் கவனத்திற்கு அதனை கொண்டு சென்றார், அதனையடுத்து தலைமை ஆசிரியர், சம்மந்தப்பட்ட மாணவியிடம் பெற்றோரை அழைத்து வந்து தன்னைப் பார்க்கும் படி கூறியுள்ளார்.
இதன் பேரில் இன்று அந்த மாணவி தனது தாய் சந்திராவுடன் பள்ளிக்கு சென்ற போது அங்கு தலைமை ஆசிரியர் பிரீத்தி, மாணவியிடம் இனிமேல் வகுப்பு மற்றும் பள்ளியில் ஒழுக்க கேடாக நடந்து கொள்ள மாட்டேன் என எழுத்துப்பூர்வ கடிதத்தை எழுதி வாங்கிக் கொண்டுள்ளார்.
மேலும், உங்கள் பெண்ணின் செயலைப் பார்த்து, பிற மாணவியர்கள் கெடுவார்கள் எனவே நீங்கள் மாற்று சான்றிதழ் வாங்கி கொண்டு உங்கள் மகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் எனவும், இனி மாணவியை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், தேர்வெழுத மட்டும் அனுப்புங்கள் போதும் என்றும் மாணவியின் தாயரிடம் தலைமையாசிரியர் பிரீத்தி தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என கூறி அனுப்பி விட்டதாக தெரிகிறது,
இதனால் வீடு திரும்பிய மாணவி, மனமுடைந்து, வீட்டில் இருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த அவரை, மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
அங்கு மாணவி ரபஹி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வரவேண்டாம் என்றதால், மாணவி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.























