திருவள்ளூர், பிப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

தமிழ்நாடு அரசினால் பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வந்தாலும், அத்திட்டங்களை விரைவாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துச் செயல்படுத்திட அரசு அலுவலர்கள் மத்தியில் ஒருவித அலட்சியப் போக்கு இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர். அப்போக்கினை தவிர்த்து விரைவு நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் எடுத்திட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறனாளிக்கான மருத்துவச் சன்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மாதத்தில் முதல் புதன்கிழமை திருவள்ளூரிலும் 2 வது புதன்கிழமை திருத்தணியில் 3 வது புதன்கிழமை பொன்னேரியிலும் 4 வது புதன்கிழமை ஆவடி ஆகிய பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இச்சிறப்பு மருத்துவ முகாமில், மருத்துவச்சான்று வழங்குதல், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டும் வருகின்றன.

மேலும் இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால் மருத்துவமனையில் போதிய டாக்டர்களும் மாற்றுத்திறனாளிக்கான அடிப்படை வசதிகளான சக்கரம் நாற்காலி இருக்கை வசதி போதிய அளவில் வழங்காததால் மாற்றுத் திறனாளிகள் தரையில் அமர்ந்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

நிர்வாக காரணங்களுக்காக கடந்த மாதம் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறாமல் இருந்ததால், இம் மாதம் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் வரக்கூடும் என தெரிந்தும் போதிய ஏற்பாடுகளை செய்யாமல் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாற்றுத்திறனாளிகள் மாவட்டநிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எதிர் வரும் அடுத்தடுத்த முகாமிற்கு தேவையான முன்னேற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here