கும்பகோணம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில், இன்று இராமநவமி முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்னக அயோத்தி என போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் ஏழு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட பழமையான திருக்கோயிலாகும்.
இங்கு இராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார், இராமபிரான் சீதா தேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் விண்ணையும் மறு கையில் இராமாயண சுவடியும் ஏந்தியப்படி காட்சியளிக்கிறார்.
இத்தகைய சிறப்பு ஸ்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
மேலும் அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் சமேதராய் தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 10 ஆம் நாள் 18 ஆம் தேதி திருமஞ்சனம், புஷ்பயாகமும் 21 ஆம் தேதி ராஜ உபசார திருமஞ்சனத்துடன் இவ்வாண்டிற்கான ராமநவமி பெருவிழா நிறைவு பெறுகிறது.























