கும்பகோணம், செப். 27 –
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும், மகாமக பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சைவத்தலங்களில் முதன்மையானதுமான மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உற்சவருக்கு நிறைமணி (எ) தேவேந்திர பூஜை அலங்காரத்துடன் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், பெரிய பெரிய பொம்மைகளை கொண்டு சிறப்பாக கோயில் மண்டபத்தில் கொலுவும் வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான சிறுவர் சிறுமியர், வயோதிகர்கள் உட்பட அனைவரும் ஆர்வமாக கண்டு களித்தனர்.
கும்பகோணம் மாநகரில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை நடைபெறும் மகாமகம் பெருவிழா உலக பிரசித்தி பெற்றது, அந்த மகாமகம் பெருவிழா தொடர்புடைய 12 சைவ திருத்தலங்களில் முதன்மையான தலமாக விளங்குவது, மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா பத்து நாட்களுக்கு உற்சவருக்கு விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுபோலவே இவ்வாண்டும் இவ்விழா புரட்டாசி அமாவாசை தினமான நேற்று முன் தினம் இரவு உற்சவருக்கு தேவேந்திர பூஜை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சார்த்தி செய்யப்பட்டு விழா தொடங்கியது, இந்நிகழ்வில், ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர் மேலும் இக்கோயிலில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான, 60க்கும் மேற்பட்ட பெரிய பெரிய கொலு பொம்மைகளை கொண்டு புராண, இதிகாச, நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில் அரசவை தர்பார் மண்டபம் உள்ளிட்ட கொலு காட்சியும் வைக்கப்பட்டுள்ளது
இக்கொலு காட்சியில், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சண்முகர், கயிலை காட்சி, திருப்பதி மலையப்பசுவாமி, தசவதாரக்காட்சி, காமாட்சியம்மன், துர்க்கை, சிவபூஜை, லட்சுமி, சரஸ்வதி, சிவதாண்டவம் என பல காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நாள்தோறும் உற்சவருக்கு வெண்ணெய்தாழி அலங்காரம், சயன அலங்காரம், மார்கண்டேய அலங்காரம், சிவலிங்க ஆலிங்கன அலங்காரம், ஞானப்பால் அலங்காரம், வேணுகான அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், சரஸ்வதி அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டு நிறைவாக, விஜயதசமி தினமான அக்டோபர் 04ம் தேதி செவ்வாய் இரவு, அம்பாள் அம்பு போடும் நிகழ்வும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.