பூவிருந்தமல்லி, மே. 10 –
சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லி அருகேவுள்ள நசரத்பேட்டையில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9 ஆம்வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சுய சிந்தனையையும், தொலைநோக்கு பார்வையும் வளர்க்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் “சிறகுகள் 200” என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு,
அறிவியல், கணினி அறிவியல், நாடகக்கலை, நடனம், பாட்டு, தற்காப்பு கலை, குறும்படம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து சிறப்பு நிபுணர்கள் மூலம் மே10 முதல் மே16 வரையிலான 7 நாட்கள் நடைபெறவுள்ள உண்டு உறைவிட கோடைகால சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, தலைமையுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உயர் அரசு அலுவலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.