காஞ்சிபுரம், ஆக. 03 –
காஞ்சிபுரம் அருகே உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மூலஸ்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கூழ்வார்த்தல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதனைப் போன்று இந்தாண்டும் ஆடி மாதம் 3 வது ஞாயிற்று கிழமையன்று மூலஸ்தம்மன் திருக்கோவிலில் 22வது ஆண்டு ஆடி மாத கூழ் வார்த்தல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
அதனையொட்டி மூலஸ்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு மல்லிகை, ரோஜா, மற்றும் சாமந்தி பூக்களாலும், துளசி உள்ளிட்ட மலர்மாலைகள், நவரத்தினம் மாலைகளுடனும், தங்க கவசத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
தொடர்ந்து மேளதாளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க, மானாட்டம், மயிலாட்டம், கரகாட்டத்துடன், வான வேடிக்கைகளுடன், அதிர் வேட்டுகள் முழங்க, முத்தியால்பேட்டை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து கற்பூர தீபாராதனைகள் காண்பித்து சுவாமி தரிசனம் செய்து பயபக்தியுடன் வேண்டி வணங்கி வழிபட்டுச்சென்றனர்.