புதுச்சேரி, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கோரியும், நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாளை அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டதில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நேரடி பண பரிவத்தனை திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் வழங்கப்படும் இலவச அரிசிக்கு பதிலாக அதற்கான பணத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது, நேரடி பனபரிவர்த்தனை காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டு அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 55-மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரியும், 10-ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து வேலை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தட்டாஞ்சாவடி பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.
ஆனால் போலீசார் ஆட்சியர் அலுவலகம் அருகே தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தியதால் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.