மீஞ்சூர், டிச. 02 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் 2வது வார்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அம்முகாமில் புதிதாக பதிவு செய்யும் பயனாளிகள் மற்றும் பழைய காப்பீட்டு திட்ட அட்டைகளை மாற்றி புதிய கார்டாக பதிவு செய்யும் பயனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு செய்தனர். மேலும் மீஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு மருத்துவ முகாமும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் அச்சிறப்பு முகாம்களை துவக்கி வைத்தார். மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், வார்டு கவுன்சிலர் அபூபக்கர், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,
முகாமில் மீஞ்சூர் வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரளாக வந்திருந்தனர். மேலும் அச்சிறப்பு முகாம்களில் தங்களது ஆவணங்களை காண்பித்து மருத்துவ அட்டையினை பதிவு செய்து பயன்பெற்றனர், இதில் திமுக நிர்வாகி மீ.மு. ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் ஏ.கே.சுரேஷ், மீஞ்சூர் வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், திமுக நிர்வாகி அனஸ், காங்கிரஸ் நிர்வாகி சித்திக் பாஷா, நகர பொறுப்பாளர் அரவிந்தன், அரியன் வாயில் அப்துல்சமத், சமூக ஆர்வலர் குரு சாலமோன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் வார்டு உறுப்பினர் அபூபக்கர் செய்திருந்தார்.























