சென்னை:

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் வழங்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-

இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக குறைவான தண்ணீரே இருக்கிறது.
கோடை காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ரூ.157 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது யானைப்பசிக்கு சோளப்பொரி வழங்குவது போன்றது.
சென்னையில் மட்டு மல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 110-விதி கீழ் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.
அந்த திட்டங்கள் என்ன ஆனது? வருகிற கோடை காலத்தில் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே கருத்தை காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் வேலுமணி கூறியதாவது:-

அம்மாவின் இந்த அரசு குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 142 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை மிக குறைவாக பெய்து இருக்கிறது. எனவே மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி குடிநீர் வழங்குவதற்கான பணிகளை தூரிதப்படுத்தி வருகிறார்.

சென்னைக்கு 22 கல்குவாரிகளில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீராணம் ஏரிக்கு மீண்டும் மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நீர்நிலைகளில் இருந்தும், ஆழ்துளை கிணறுகள் மூலமும், விவசாய கிணறுகள் மூலமும் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணா நதிநீர் கடந்த 12-ந் தேதி முதல் மீண்டும் கொண்டு வந்து இருக்கிறோம். குழாய் தண்ணீர் செல்லாத இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தேவைப்படும் இடத்தில் குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்படுகின்றன.

சென்னை நகருக்கு வருகிற டிசம்பர் மாதம் வரை தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதே போல் மற்ற மாவட்டங்களிலும் குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
கடல் நீர் குடிநீராக்கும் 5 திட்டங்களில் இரண்டு திட்டங்களை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கடன் உதவியுடன் இது செயல்படுத்த இருக்கிறது. மற்ற திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here