ராஜமுந்திரி :

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும் அலட்சியமாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலையும், ரபேல் ஒப்பந்தத்தையும் இணைத்து காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இதைப்போல புலவாமா தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றவில்லை என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் கூறியிருந்தார்.

இதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாட்டின் முதல் பிரதமரான நேருவே காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம். காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரம் ஐதராபாத் விவகாரத்தை சர்தார் படேல் கவனித்ததால், அது இன்று நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. அவரே நாட்டின் முதல் பிரதமராகி இருந்தால், காஷ்மீர் பிரச்சினை இருந்திருக்காது.

நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களுக்காகவும் பிரதமர் மோடி நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைத்து வருகிறார். ஆனால் அவரது நோக்கம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். பாகிஸ்தான் பிரதமரை நம்பும் நீங்கள், உங்கள் பிரதமரை நம்பவில்லை. மலிவான அரசியலில் ஈடுபடாதீர்கள். மக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

புலவாமா சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம். அதனால் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது. ஏனெனில் ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியுடனும், உயிரிழந்த வீரர்களுடனும் இருக்கிறது.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here