இஸ்லாமாபாத்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2014 அன்று ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவுபெற்ற பயங்கரவாத நடத்திய தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீதும், அதன் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதைதொடர்ந்து, ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கம் மற்றும் பலாக்-ஐ-இன்சானியட் அறக்கட்டளை ஆகிய 2 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு சமீபத்தில் தடை விதித்துள்ளது. இந்த அமைப்புகளின் வங்கி கணக்குகளும், அசையாச் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.

ஜமாத்- உத்தவா அமைப்பை லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் நடத்துகிறான். இவன் மும்பை தாக்கதலுக்கு மூளையாக செயல்பட்டவன். இவன் தலைக்கு அமெரிக்கா ரூ.7 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. விசாரணைக்கு தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவன் பாகிஸ்தானில் இல்லை என அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.

ஜமாத்-உத்-தவா மற்றும் அதன் அறக்கட்டளையான பலாக்-ஐ- இன்சானியட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2005-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட பட்டியலில் அறிவித்தது. ஆனால் பாகிஸ்தான் அதை கண்காணிப்பு பட்டியலில் வைத்திருப்பதாகவும் தடை பட்டியலில் இல்லை என்றும் அறிவித்தது.

லஷ்கர்-இ- தொய்பா மற்றும் மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட 68 பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துர் ரவூப் மற்றும் ஹம்மாத் அசார் உள்பட தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 44 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த தகவலை பாகிஸ்தான் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணை மந்திரி ஷெஹ்ர்யார் அஃப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். பயங்கரவாத இயக்கங்களை முடக்கும் நாடு தழுவிய அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைதாகியுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும் என்பதால் இன்னும் பலர் கைதாக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here