கும்பகோணம், மே. 24 –
கோயில் நகரமாகப் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயில், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும் ஆகுமென இத்திருக்கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும், இது பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட, மார்கண்டேயருக்கு காட்சியளித்த, புண்ணிய தலமெனவும், மேலும், இத்தலத்தில் குழந்தைபேறு இல்லாத தம்பதியர்கள் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பாயசம் நிவதனம் செய்தால் குழந்தைபேறு கிட்டும் என்பதும் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீகம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இத்திருக்கோயிலில் மாதம் தோறும், வளர்பிறை அஷ்டமி திதியில் தாயார் சன்னதியில் ஸ்ரீசுத்த ஹோமம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல்வேறு பெருமைக்குரிய இவ் வைணவ தலத்தில் ரூ ஒரு கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, கடந்த 22ம் தேதி ஸ்ரீ பகவத் ப்ராத்தனா அனுக்ஞை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை கும்ப பூஜை, கலாகர்ஷனம்,கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் அங்குரார்பனம், திக்பந்தனம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 4 ஆம் கால யாக சாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹதி அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்ற பின்பு, மங்கல வாத்தியங்கள் முழங்கள், கடங்கள் புறப்பாடு நடைபெற்று அதன் பிறகு பட்டாச்சாரிகள் வேத மந்திரம் ஜெபிக்க விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.